Tamilnadu Governor RN Ravi Tamil News: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுனர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க ஆளுனருக்கு அதிகாரமில்லை என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், ஆளுனரின் அறிவிப்பை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுனருக்கு அதிகாரம் இருக்கிறதா? நீதிமன்ற தீர்ப்புகள் என்ன கூறுகின்றன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஒரு மாநில அமைச்சரவை நியமனம் குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 164 விவரிக்கிறது. ஒரு மாநில முதலமைச்சரை ஆளுனர் நியமனம் செய்வார். மற்ற அமைச்சர்களை முதலமைச்சர் பரிந்துரையில் ஆளுநர் நியமனம் செய்வார். ஆளுனரின் விருப்பமுள்ளவரை அமைச்சர்கள் பதவி வகிக்க முடியும் என்கிறது பிரிவு 164. இதில் ஆளுனரின் விருப்பம் என்பது முதலமைச்சரின் விருப்பமாகும். சட்டத்தில் Pleasure of Governor என்பதை முதலமைச்சரின் விருப்பம் அல்லது அதிகாரம் என்றே பல வழக்குகளில் விளக்கப்பட்டுள்ளது.
1974-ல் பஞ்சாப் மாநில அரசு சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணையை மேற்கொண்ட 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பெயரிலே ஆளுனர் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டது. அரசியலமைப்பு சட்ட நிபுணரும், மக்களவை முன்னாள் செக்ரட்டரி ஜெனரல் பி. டி. தங்கப்பன் ஆச்சார்யாவும், முதலமைச்சர் பரிந்துரையே முக்கியம் என்கிறார்.
டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினை 2022 மே மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவரது இலாகாவை சிசோடியாவிடம் ஒப்படைத்தார் முதலமைச்சர் கெஜ்ரிவால். அப்போது சத்யேந்திர ஜெயின் அமைச்சரவையில் நீடிக்கக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2022 ஜூலையில் விசாரணையை மேற்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், குற்றப் பின்னணி கொண்டவர் அமைச்சரவையில் தொடர வேண்டுமா…? வேண்டாமா…? என்பதை முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. தொடர்ந்து 9 மாதங்கள் கெஜ்ரிவால் அமைச்சரவையில் தொடர்ந்து நீடித்த சத்யேந்திர ஜெயின், கடந்த பிப்ரவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஆளுனர் ரவி. உத்தரவுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், ஆளுனர் சட்டத்தை புறம்தள்ளி அரசியல் செய்கிறார் என்றும் குற்றம் சாட்டி வருகின்றான.
ஆளுநர் உத்தரவில் திருப்பம்
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்தள்ளார். இதுதொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil