நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று ஆளுனர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் இந்திய குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
இதையும் படியுங்கள்: குடிநீர் தொட்டியில் மலம்.. பிரிவினைவாத அரசியல் தவிர்க்கப்பட வேண்டும்: ஆளுநர் ரவி பேச்சு
அப்போது, வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலமாக வரும் நிதிகளை முறைப்படுத்த வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுனர் ஆர்.என்.ரவி, ”வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் பலவும் முறையாகப் பயன்படுத்தப்படாமல் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நமது நாடு வேகமாக வளர்ந்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூடங்குளம் அணு உலை, விழிஞ்சம் துறைமுக திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்திலும் வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டன. நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தமான நிகழ்வு.
வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வெளிநாட்டு நிதி நாட்டுக்கெதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்த மத்திய அரசு எப்.சி.ஐ நிதியை முறைப்படுத்தி உள்ளது” என்று கூறினார்.
பின்னர் சட்டப்பேரவை தீர்மானங்கள் குறித்த கேள்விக்கு, ”சட்டப்பேரவை தீர்மானங்களை ஆளுனர் நிலுவையில் வைத்திருந்தால், அதற்கு நாகரீகமாக நிராகரிக்கப்பட்டது என்று பொருள். நிலுவையில் வைப்பது நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்று பொருள் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறுகிறது. பொதுப்பட்டியலில் உள்ளவைக்கு மத்திய அரசு சட்டம் இயற்றாவிடினும் மாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் மாநில அரசின் சட்டம் மத்திய அரசின் சட்டத்துடன் பொருந்த வேண்டும். சட்டப்பேரவையின் தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிக்கு உட்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்,” என்று ஆளுனர் ஆர்.என்.ரவி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.