மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறுகிறது. இன்று மாலை நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தையொட்டி, அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இன்றைய பொதுக்கூட்டத்தில் இன்று முக்கியமாகப் பேச இருக்கும் தலைப்புகள் குறித்து அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது ஆனால், 2016ம் ஆண்டு தீர்ப்பை போலவே இப்போதும் மத்திய நாடகம் நடத்தி வருகிறது என்று கமல் குற்றம்சாட்டினார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார். சாக்குப் போக்குகள் சுட்டிக்காட்டி இனியும் இது தாமதிக்க கூடாது என்றார்.
அதோடு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தராத மாநில அரசையும் அவர் விமர்சித்தார். இதில் “தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோ அல்லது போலியாக ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தோ தமது இயலாமையை மறைக்க முடியாது. மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுக்காமல் மத்திய அரசின் எடுபிடி போல் நடந்து கொண்டிருக்கிறது தமிழக அரசு.” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் முக்கிய தலைப்பாக காவிரி குறித்து பேசப்படும் என்று தெரிவித்தார். காவிரியின் பிரச்சனைகள் மட்டுமில்லாமல், தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
இன்றைய கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒரு சில கொள்கைகள் அறிவிக்கப்படும் மற்றும் ஐந்து மாதத்திற்கு முழுமையாகக் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்படும் என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.