தமிழ்நாட்டில் கோவை உள்ளிட்ட 7 மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட 4 டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஜூன் 14 முதல் தேநீர் கடைகளை திறக்க அனுமதிப்பது உள்ளிட்ட மேலும் சில தளர்வுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 31.05.2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் நோய் பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட 7 மேற்கு மாவட்டங்கள் (கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல்) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 டெல்டா மாவட்டங்கள் என 11 மாவட்டங்களில், நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், தவிர்த்த பிற மாவட்டங்களில் தளர்வுகள் சற்று விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் ஜூன் 14 முதல் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும்போது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை
மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம். இங்கும் (பேக்கரிகள் மற்றும் உணவகங்கள்) பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
பொது மக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் ஜூன் 14 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.” என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.