தமிழ்நாட்டில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் மாதம் தோறும் துவரம் பருப்பு, பாமாயில் மானிய விலையில் தரப்படுகிறது. ரேஷனில், அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்த பொருட்களை அரசு மொத்தமாக டெண்டர் மூலம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. சில நேரங்களில் ரேஷன் பொருட்கள் டெண்டர் மற்றும் கொள்முதலில் தாமதம் ஏற்படுகின்றன.
இதனால், ரேஷன் கடைகளில் சில பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிடைக்காமல் போகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் பல ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் கடந்த ஜூலை மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.
ஜூன் 2024-ம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜூன் 2024ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூலை 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஜூன் 2024-ம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுலை 2024-ம் மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், ஜூலை 2024ஆம் மாதத்தில் சிறப்பு பொது விநியோகத்திட்டப் பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களால் ஜூலை 2024-ம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை.
ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜூலை 2024-ம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜுலை 2024-ம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஆகஸ்ட் அறிவிக்கப்படுகிறது. 2024-ம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“