Tamilnadu Government: தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த ஜனவரி 7, 8 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 632 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
ஏற்கனவே, 2015 மற்றும் 2019ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களிடம் இருந்து 50 சதவீதம் கூட முதலீடுகள் வராத நிலையில், சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த, அமைச்சர் ராஜா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும், ஒவ்வொரு ஒப்பந்தமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, முழு தொழிற்சாலையாக முயற்சிகள் எடுக்கப்படும்' என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், தற்போது தொழில் தொடங்குவதை கண்காணிக்க தொழில்துறை அமைச்சர் ராஜா தலைமையில் சிறப்புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்புக் குழுவில் தலைமை செயலர், தொழில்துறை செயலர், மின் வாரிய தலைவர், தகவல் தொழில்நுட்ப துறை செயலர் உட்பட 17 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு, முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி, தேவைகளை கேட்டறிந்து, தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“