தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு 50,000-ஐ தாண்டியுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. கண்காணிப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள், சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட கண்ணகாணிப்பு அதிகாரியாக செயல்படுவார்.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, தீவிர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் "அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு" வழங்கவும், சமுதாய உணவுக்கூடங்கள் மூலமாக "உணவு தேவைப்படும் முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோரின் வீடுகளுக்கே சென்று விலையில்லா உணவு" வழங்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும், பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 30ம் தேதியோடு முடிவடையும் நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை முடிவிட்டுள்ளது.