kilambakkam: சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை கடந்த வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊருக்கு நேற்று முதல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆய்வு
இதற்கிடையில், இந்தப் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு சில நாட்களுக்கு முன்னதாக நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சி.இ.ஒ நியமனம்
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சி.இ.ஒ நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையரக இணை இயக்குனர் பார்த்தீபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சி.இ.ஒ-வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு சிக்கல் எதுவும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுகிறதா? வசதிகள் முறையாக உள்ளதா? என்பது உள்ளிட்ட பணிகளை சி.இ.ஒவாக நியமிக்கப்பட்ட பார்த்தீபன் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“