அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் செவ்வாய் கிழமை (ஜன.9) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்தது.
எனினும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக இன்றும் (ஜன.10) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (ஜன.10) தமிழகம் முழுவதும் 97.7 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15,226 பேருந்துகளில் 14,888 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னையில் மாநகர பேருந்து 97.68 சதவீதம் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் பணிமனைகளில் இருந்து 1779 பேருந்துகளில் 1763 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சேலம் பணிமனைகளில் இருந்து 794 பேருந்துகளில் 775 பேருந்துகளும், கோவை பணிமனைகளில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 1870 பேருந்துகளில் 1787 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதை கருத்தில் கொண்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அசல் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“