ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு (15வது ஊதிய திருத்த ஒப்பந்தம்), காலியாக உள்ள பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புதல், எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்குதல் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏராளமானோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊா்களுக்கு அடுத்த வாரம் செல்லத் தொடங்குவார்கள். அந்த நேரத்தில் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால், வரும் ஜனவரி 9-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும்.
வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். ஊழியர்கள் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு என அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, பணிக்கு வந்து சீரான பேருந்து இயக்கம் அமைய உதவ வேண்டும்.
சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும், என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையே சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“