தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படியை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும்போது கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும், போக்குவரத்துத் துறையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கி உள்ளனர்.
இதனால் தமிழகத்தில் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தேவைப்பட்டால் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள், நடத்துனர்களுடன் உரிய பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (ஜன.09) அனைத்து பேருந்துகளும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து பணிமனைகளில் இருந்தும் அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது.
பயணிகள் பேருந்து இயக்கம் தொடர்பாக எந்தவித அச்சமும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம். மேலும், அனைத்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் முழுமையாக கண்காணித்து வருகின்றனர், என அவர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு பணிமணையில் இருந்து பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் காவலர்களின் உதவியுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு பணிமனையில் இருந்து 40 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 11 பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதேபோல் மதுராந்தகம் பேருந்து பணிமனையில் இருந்து காவல்துறை உதவியுடன் இன்று காலை ஐந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பணிமனையில் 54 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு நிலையில், பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் வழக்கம்போல இங்கு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராமநாதபுரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், நகர்ப்பகுதி பணிமனையில் இருந்து எந்தவிதமான பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்க முன்வராததால் நேற்று நள்ளிரவு முதல் நீண்ட நேரமாக மக்கள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். ராமநாதபுரம் புறநகர் பணிமனையில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுகிறது என சேலம் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி, தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு ஊர்களுக்கு வழக்கமான பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“