தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால், 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவிடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 15,830 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்ததையடுத்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,728 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1 லட்சத்து 8 ஆயிரத்து 855 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று மேலும் புதியதாக 4,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்து 614 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சனிக்கிழமையும் மீன் இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூடுவதற்கு தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”