/indian-express-tamil/media/media_files/wz1Xgd1OqMZ72ZJLP4oN.jpg)
தவறான உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளன்று, தமிழகத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை வாய்மொழி வழியாக தடை விதித்துள்ளது என பொய்ச் செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது அதனையொட்டி தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை வாய்மொழி வழியாக தடை விதித்துள்ளது என ஒரு நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீய நோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அந்த நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 2021-ல் பொறுப்பேற்றது முதல் இந்து சமய அறநிலைத்துறையின் பணிகளில் ஒரு சிறு குறையும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்குப் பின் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உட்பட 1270 திருக்கோயில்களுக்கு முதலமைச்சரின் அறிவுரையின்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் 764 திருக்கோயில்களில் நாள்தோறும் அன்னதானம் வழங்கும் பணிகள் நடைபெற்று பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புணரமைத்திடும் வகையில் 2022-23 ஆம் நிதியாண்டில் 113 திருக்கோயில்கள் ரூ. 154.90 கோடி மதிப்பீட்டிலும் 2023-24 ஆம் நிதியாண்டில் 84 திருக்கோயில்கள் ரூ. 149.95 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய வழிபாட்டு உணர்வுகளில் கூறியுள்ள தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் இந்த உண்மை புரியும். மாற்றுக் கருத்துடைய எதிர்க்கட்சிகள் கூட இதனை மறுக்க முடியாது.
இந்நிலையில் திருக்கோயில் பணிகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றி நாள்தோறும் மக்களின் பாராட்டுகளை பெற்று வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றே முன்னோக்கத்துடன் பொய் செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய தவறான உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட அந்த நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.