பல ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (ஏ.ஏ.ஐ) எவ்வித எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவலின்படி, கையகப்படுத்தப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தை இலவசமாக எந்த நிபந்தனையும் இன்றி 99 ஆண்டுகள் ஏ.ஏ.ஐயிடம் குத்தகைக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் பட்சத்தில், வருவாயை மாநிலத்துடன் பகிர்ந்து கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
2010-ல், கோவை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, 468.83 ஏக்கர் தனியார் நிலம் உட்பட 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும் நிலம் கையகப்படுத்தல் முறையில் பல சவால்கள் ஏற்பட்டது. தமிழக அரசு இதுவரை நிலம் கையகப்படுத்த ₹2,088.91 கோடி வழங்கியுள்ளது.
கடந்த வாரம் இதுகுறித்துப் பேசிய ஆட்சியர் கிராந்தி குமார் கிட்டத்தட்ட 97% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் 2 வாரங்களில் மற்ற அனைத்து வேலைகளும் முடிவடையும் என்றார்.
தொடர்ந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு நிலங்களை நிபந்தனையின்றி வழங்க தமிழக முதல்வர் முடிவெடுத்துள்ளதற்கு கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“