முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். மற்றும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிப்ரவரி 2-ம் தேதி சிறை இருப்பு போராட்டம் நடத்துவோம் என அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது,
இதுபற்றி அந்த அமைப்பின் மாநில பொது செயலர் செல்வம் கூறியதாவது :
2016 -ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப தர வேண்டும். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என கூறுபவர்கள் அதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்
2018 ஆம் ஆண்டு ஜாக்டோ -ஜியோ அமைப்பு முடிவில்லா வேலை நிறுத்தத்தை அறிவித்து போராட்டம் நடத்தியது. அந்த அமைப்புக்கு எதிராக சுமார் 5068 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அத்தனை வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். வழக்குப்பதிவு செய்யப்பட்டடுள்ளதால் ஓய்வு பெற்ற ஊழியர்கள் யாரும் ஓய்வூதியத்தை பெற இயலவில்லை. பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. கொரோனா காரணமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ள ஊதியத்தையும் திரும்ப வழங்க வேண்டும்.
இல்லையென்றால், ஜனவரி 5 முதல் 7ம் தேதி வரை பிரச்சார கூட்டங்கள் நடத்துவோம். ஜனவரி 19 மற்றும் 20 தேதிகளில் மண்டலங்கள் தோறும் போராட்டக் கூட்டம் நடத்துவோம். அதுமட்டுமல்லாது, ஜனவரி 27ம் தேதி மாநில அளவிலான மாநாடு ஒன்றை நடத்த உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"