தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் ஜனவரி 18 முதல் ஜனவரி 25ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த ஆண்டு ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்த பொங்கல் பரிசு தமிழகத்தில் ஜனவரி 4ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், பல குடும்ப அட்டைதாரர்கள் வெளியூர்களில் இருப்பதால் இன்னும் பொங்கல் பரிசு வாங்காமல் உள்ளனர். அதனால், தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டித்துள்ளது
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்க தொகையை ஜனவரி 4ம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 12ம் தேதிக்குள் வினியோகம் செய்யவும் குறிப்பிட்ட நாளில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13 அன்று வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்க தொகையினை குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபடுதல் இன்றி வழங்க ஏதுவாக ஜனவரி 18 முதல் ஜனவரி 25ம் தேதி வரை நியாயவிலைக் கடைகளில் விடுமுறை நாள் தவிர அனைத்து நாட்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் உங்கள் நண்பர்களுக்கும் பொங்கல் துணிப்பை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"