உக்ரைனில் ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்களின் நிலை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் வெளியேற முடியாமலும், எல்லையில் உறைபனியிலும் ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில்’ மத்திய அரசு ’ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து இதுவரை 6,200 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 193 மாணவர்கள் மட்டுமே இதுவரை தாயகம் திரும்பியுள்ளனர். அடுத்த இரு நாட்களில் 7400 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்’ உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின், அரசு அதிகாரிகளுடன் நேற்று (மார்ச்.3) ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் முடிவில்’ உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் அழைத்து வருவதற்கு, தமிழக அரசு அமைத்துள்ள குழுவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் தேவையான அனுமதியை விரைவாக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். pic.twitter.com/iqGUMIrzs7
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 3, 2022
அந்த கடிதத்தில்’ தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம், உக்ரைனில் சிக்கித் தவிக்கும், மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தமிழக அரசு தொடர்பில் உள்ளது. இதுவரை, 2,223 மாணவர்களை விரைவாக அங்கிருந்து அழைத்து வர ஏதுவாக அவர்களின் விவரங்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்துடன் பகிரப்பட்டுள்ளன.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதில், இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டும் அதேவேளையில், இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 193 மாணவர்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். எனவே உக்ரைனில் இருந்து அழைத்து வரப்படும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் நிலைமை மோசமானதாக அறிவிக்கப்பட்டுள்ள உக்ரைனில் கிழக்கு எல்லையில் உள்ள, கார்கிவ் மற்றும் சுமி போன்ற இடங்களில் சிக்கித் தவிக்கும் பெரும்பாலான மாணவர்கள், பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மோசமான மற்றும் நிச்சயமற்ற நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் போகலாம்.
எனவே ரஷ்ய எல்லைகள் வழியாக மாணவர்களை அழைத்து வருவதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராயப்படலாம். இந்த பிரச்சனையை ரஷ்யாவின் உரிய கவனத்திற்கு அவசரமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
ருமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும் சுலோவாகியாவிற்கு 1000க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள், உக்ரைனிலிருந்து வந்து இந்தியாவிற்கு திரும்ப காத்திருக்கிறார்கள். அந்த மாணவர்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் திரும்புவதை உறுதி செய்திட, ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்எம் அப்துல்லா, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஆகியோரை, நான்கு ஐ,ஏ.எஸ் அதிகாரிகளுடன் மேற்கண்ட நாடுகளுக்கு அனுப்பி’ அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து’ பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான அனுமதிகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விரைவாக வழங்கிட வேண்டும்”.
இவ்வாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்’ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே’ அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் ஒரே நாடு இந்தியாதான். மத்திய அரசு மூத்த அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மீட்பு பணிக்கு அனுப்பியுள்ள நிலையில் சிறப்பு குழுவின் தேவை என்ன? என தமிழ்நாடு அரசுக்கு’ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.