தமிழகத்தில் 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதை எளிதாக்கி விரைவாக வழங்கும் வகையில் 2023-ம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரம் அளிக்கப் பெற்ற குழுவின் ஒப்புதல் பெற்று சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
2024-ம் ஆண்டு முதல் மதவழி சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 11-ம் தேதி தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முருகானநந்தம் தலைமையில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையின அந்தஸ்து வழங்குவதற்கு அதிகாரம் அளிக்கப் பெற்ற குழுவினருடன் 7வது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 160 கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இதுவரை 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 246 நிரந்தர அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.