Transport-corporation-unions: ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ரமேஷ், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ மற்றும் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வரும் 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தம்
இந்நிலையில், ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. மேலும், வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்து இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அழைப்பு
இந்த நிலையில், இது தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆலோசனைக்கு பின்னர் தற்போது தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்று மதியம் 3 மணி அளவில் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“