தமிழகத்தில் 3,500 சதுர அடி பரப்பில் கட்டப்படும் குடியிருப்புக் கட்டுமானத்துக்கு சுய சான்றிதழ் திட்டத்தின்படி இணைய வழியில் உடனடியாக அனுமதி அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தில் 3,500 சதுர அடி வரை பரப்பளவிலான குடியிருப்பு கட்டுமானத்துக்கு சுய சான்றளிப்புத் திட்டத்தின் மூலம் உடனடி அனுமதியை தமிழக அரசு குறைந்த செலவில் எளிதான செயல்முறைகளை வழங்குகிறது.
தமிழ்நாட்டில் சிறிய அளவிலான குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி பெறுவது இப்போது எளிதாகிவிட்டது. 2,500 சதுர அடி முதல் 3,500 சதுர அடி வரையிலான மனைகளில் வீடுகளைக் கட்டத் திட்டமிடுபவர்கள் சுய சான்றிதழ் அடிப்படையில் கட்டிட அனுமதியைப் பெறலாம் என்று தமிழக அரசு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்து, 10 பயனாளிகளுக்கு கட்டட அனுமதியை வழங்கினார்.
தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கும், நடுத்தர மக்களுக்கும் உதவும் என்று நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனரக இயக்குநர் பி.கணேசன் தெரிவித்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில் 3,500 சதுர அடி கட்டடப் பரப்புக்குள் தரைத்தளம், முதல் தளம் கொண்ட 7 மீட்டா் உயரத்துக்கு உள்பட்ட குடியிருப்புக் கட்டடத்துக்கு சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதியை எளிதாகவும், உடனடியாகவும் பெற முடியும்.
சுயசான்றிதழ் திட்டம் என்பது, பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்று வரும் நேரத்தை தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சுயசான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிதான வகையில் அமைந்து மக்களுக்குப் பயனளிக்கும். இதுதொடா்பாக, ஒற்றைச்சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்துக்கான இணையதளம் உருவாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சுயசான்றிதழ் திட்டத்தின்கீழ், அனுமதி பெறும் கட்டடங்களுக்கும் சாலைக்கும் இடையிலான தொலைவு 1.5 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வுக்கான கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.2, உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளுக்கான கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.375 ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்ப்பட்டுள்ளது.
இதைத் தவிா்த்து மீதமுள்ள கட்டணங்களைச் செலுத்திய பின்னா் க்யூஆா் குறியீட்டுடன் கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயசான்று அடிப்படையில் கட்டடங்களுக்கு இணையவழியில் உடனடி அனுமதியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அனுமதிக்கான காலம் 5 ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதுடன், விதிமீறல்கள் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த அனுமதியானது, விண்ணப்பதாரா்தான் நிலத்தின் உரிமையாளா் என்பதற்கான எந்த உரிமையையும் உறுதிப்படுத்தாது. இதை எந்தவிதத்திலும், ஆவணமாகப் பயன்படுத்த இயலாது.
சம்பந்தப்பட்ட நிலம் விவசாய நிலமாகவோ, நிறுவனத்துக்குச் சொந்தமானதாகவோ, திறந்தவெளிப் பகுதி, கேளிக்கை பயன்பாட்டுப் பகுதி, சாலைக்கு ஒதுக்கப்பட்டதாகவோ இருந்தால் அனுமதி தானாக ரத்து செய்யப்படுவதுடன், நடவடிக்கை எடுக்கப்படும். ஒருங்கிணைந்த கட்டட விதிகளின்படி கட்டடங்கள் கட்டப்பட வேண்டும்.
அப்படி சுயசான்றிதழ் திட்டத்தில் அனுமதி பெறும் கட்டடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டால், உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பதாரரின் சுயசான்றிட்ட ஆவணங்கள் மற்றும் கட்டட வரைபட அனுமதி ஆகியவை அதிகாரிகளால் சரிபாா்க்கப்பட வேண்டும். சுயசான்றளிக்கப்பட்ட, சுயமாக எடுக்கப்பட்ட அனுமதியில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.
விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட வடிவமைப்பு, அடித்தளம், பயன்படுத்தப்படும் மரம், கான்கிரீட், கம்பி உள்ளிட்டவை உரிய விதிகளின்படி இருக்க வேண்டும்.
கழிவுநீா்த் தொட்டி, மழைநீா் சேகரிப்பு அமைப்பு, தண்ணீா்த் தோட்டி ஆகியவை உரிய விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும். தெருக்களில் கட்டுமானப் பொருள்கள், கழிவுகள் கொட்டப்படக் கூடாது. கட்டுமானப் பணிகள் முடிந்த 30 நாள்களுக்குள் சொத்து வரிக்கான விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னையில் வீடு கட்டுவதற்கு சுயசான்றிதழ் அடிப்படையில் அனுமதி அளிக்கும் திட்டத்தை தொடா்ந்து கண்காணிக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் முத்துசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “தமிழகத்தில் எங்கு வீடு கட்டினாலும் அதற்கு அனுமதி கொடுப்பதற்காக, புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அடுத்து வரக்கூடிய ஐந்து நாள்களில் எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன, எத்தனை மனுக்களுக்குத் தீா்வு கண்டுள்ளோம் என்பது குறித்து கண்காணிக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
இந்தத் திட்டம் தொடா்பாக, பொதுமக்களுக்கும், கட்டடம் கட்டும் பொறியாளா்களுக்கும் ஆலோசனைகள் வழங்கி உள்ளோம். எந்தவித பிரச்னையும் இல்லாமல், கட்டடம் தரமாக கட்டித் தரப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“