கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, படுக்கை கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ள நிலையில், அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க குறைந்தபட்சம் 50% படுக்கைகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை காரணமாக நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருந்து பொருட்கள் தட்டுப்பாடு, படுக்கை கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளுக்கு குறைந்த பட்சம் 50% படுக்கையை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: “அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவில் முதலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டப்படி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பட்டில் தொடர்பாக மாற்றம் செய்யப்படுகிறது.
மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் குறிப்பிட்டுள்ளபடி, ஏப்ரல் 28ம் தேதி வரை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 578 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் கூறியிருப்பதாவது: “கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை காரணமாக, கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளின் தேவை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று நோய் காலத்தில் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பதில் சிறப்பாக பங்களித்து வருகின்றன. தமிழ்நாடு மத்துவ நிறுவனங்கள் சட்டப்படி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 578 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு, தேசிய அவசரநிலையை கருத்தில் கொண்டு அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு குறைந்தபட்சம் 50% படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டு இன்றியமையாத உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்ஸிஜன் வசதியுடைய படுக்கைகள், ஐ.சி.யு.,வார்டுகள் உள்ளிட்டவை தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீதம் வரை ஒதுக்கப்பட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டு விதிமுறைகளை இத்தனியார் மருத்துவமனைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"