சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை கறாராக அறிவித்துள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தற்பொழுது கோவிட் தொற்று பல்வேறு மாநிலங்களில் அறிவித்து வருகின்றது. மேலும், தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது. இத்தொற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்றது. இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல், மற்றும் உரிய நேரத்தில், கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும் கோவிட் வழிமுறைகளை முறையாக கடைபிடித்தவர்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"