Advertisment

கைதிகள் முன் விடுதலை: இஸ்லாமியர்கள் புறக்கணிப்பு என இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனம்

நீண்டநாள் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இஸ்லாமியர்களைப் புறக்கணித்துள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ள்ளன.

author-image
WebDesk
New Update
கைதிகள் முன் விடுதலை: இஸ்லாமியர்கள் புறக்கணிப்பு என இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 13ம் தேதி சட்டப்பேரவையில் பேசியபோது, “சிறைக் கைதிகளின் முன் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு, பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் செப்டம்பர் 15ம் தேதி வருகிறது. அப்போது, நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்துவரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன்விடுதலை செய்ய இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் இதற்கான அரசாணை விரவில் வெளியிடப்படும்” என்று அறிவித்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேரை விடுதலை செய்வதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. அதில், பாலியல் வன்கொடுமை, பயங்கரவாதம், மத மோதல், வகுப்பு மோதல், சாதி மோதல், அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், சிறையில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைகளின்படி தகுதியான கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆய்வுசெய்யவும், இறுதிப் பட்டியலைத் தயாரிக்கவும் சிறப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டு விழா, எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவின் போதும் கைதிகளை முன்விடுதலை செய்தது. அதிலும் இதே விதிமுறைகளைப் பின்பற்றியதால் நீண்ட நாள் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. முஸ்லிம்கள் என்பதாலே சிலர் மீது மத மோதல், வெடிகுண்டு வழக்குகள், அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று இஸ்லாமிய அமைப்புகள் தெரிவிக்கின்றன. அதனால், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே, திமுக ஆட்சிக்கு வந்தால், நீண்டகாலம் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள், தலைவர்கள் திமுகவுக்கு கோரிக்கை வைத்து பெரிதும் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆனால், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வெடிகுண்டு வழக்கு, மத மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் தவிர்க்கப்பட்டால், இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தற்போது வெளியிடப்பட்ட அரசாணைகளில் வாழ்நாள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத/மத மோதல்களில் ஈடுபட்டுக் கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில், வாழ்நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையில் காட்டப்பட்ட பாரபட்சங்கள்போல இல்லாமல் இந்த அரசு கருணையுடன் விடுதலை செய்யும் என்று நம்பியிருந்த வாழ்நாள் சிறைவாசிகள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் மொத்த சமூகத்துக்கும் இந்த அரசாணை பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும், விரக்தியையும் அளித்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து, முதுகலைப் பட்டங்கள் வரை பெற்று, சீரிய முறையில் சீர்திருத்தம் பெற்றிருக்கும் நிலையில் விடுதலை செய்யப்படும் முஸ்லிம் சிறைவாசிகள் இனி எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். முன் விடுதலை செய்யப்படுபவர்களில் இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும்விதமாகத் தமிழக அரசின் அரசாணை உள்ளது என்ற குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், “தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை குறித்த வழிகாட்டல் அரசாணைப் பிரகாரம் பார்த்தால், 7 தமிழர்கள் மற்றும் நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை என்பது தமிழக அரசின் தற்போதைய விடுதலை நடவடிக்கையில் சாத்தியமில்லாத ஒன்றாகவே தெரியவருகிறது. அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது. தமிழக முதல்வர் இந்த அரசாணை குறித்து மீண்டும் பரிசீலித்து, இந்த கருணை நடவடிக்கையில் பாரபட்ச போக்கை கைவிட்டு அனைவருக்கும் விடுதலையை சாத்தியமாக்கும் வகையில் அரசாணையை திரும்பப்பெற்று புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

உச்சநீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளின் அம்சங்கள், தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை குறித்த வழிகாட்டல் அரசாணையில் கணக்கில் கொள்ளப்படவில்லை.
தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் 38 முஸ்லிம் சிறைக்கைதிகள் 10 ஆண்டுகளை கடந்தும் 28 ஆண்டுகள் வரை சிறைகளில் பல்வேறு அவஸ்தைகளுடன் அரசின் கருணை மூலம் தங்களின் விடுதலையை எதிர்பார்த்தவர்களாக உள்ளனர். ஆனால், தொடரும் பாரபட்ச போக்கால் மரணம் மட்டுமே அவர்களை சிறையிலிருந்து வெளிக்கொண்டு வருகின்ற அவலம் தொடர் கதையாகி வருகின்றது.

அதேபோல், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைச்சாலையில் அடைபட்டுள்ளனர். அவர்களும், அவர்களின் குடும்பத்தினர் உட்பட ஒட்டுமொத்த தமிழகமும் விடுதலையை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பையும் தமிழக அரசின் அரசாணை ஏமாற்றியுள்ளது.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் எவ்வித சட்ட சிக்கலோ, நீதிமன்றத் தடையோ இல்லை. முழுக்க முழுக்க அது மாநில அரசின் முடிவில் உள்ளது.
ஆகவே, ஆயுள் சிறைவாசிகள் விவகாரத்தில் பாரபட்சத்தை போக்கி அனைத்து தரப்பினருக்கும் விடுதலையை தமிழக அரசு சாத்தியமாக்க வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதற்காக குரலெழுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நீண்டகாலம் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்விடுதலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, இஸ்லாமியர்களை புறக்கணிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு, ஏற்கெனவே உள்ள விதிமுறைகளின்படி அரசானை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், திமுக அரசு, இஸ்லாமியர்களை புறக்கணிக்காது. அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cm Mk Stalin Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment