தமிழ்நாட்டில் அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் மலைவாழ் மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக ரூ.1.60 கோடி செலவில் 25 பைக் ஆம்புலன்ஸ்கள் வாங்க தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் (Bike Ambulance) 1.60 கோடி ரூபாய் செலவில் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த வாகனங்கள் 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக (Feeder Ambulance) செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல வழிவகுக்கும். மாநிலம் முழுவதும் உள்ள எளிதில் அணுக முடியாத மலைக் கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்களின் சுகாதார சேவையை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
போக்குவரத்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு குறித்த நேரத்தில் உரிய மருத்துவ சேவை கிடைப்பதை இந்த இரு சக்கர அவசரகால வாகன சேவை உறுதி செய்யும்.
நவீன முறையில் உரிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர அவசரகால வாகன சேவையானது, தற்போதுள்ள 1353 அவசரகால 108 ஊர்தி சேவையினுள் அடங்கும். இந்த இரு சக்கர அவசரகால வாகனங்களின் சேவை கடைநிலை பயனாளர் வரை சென்றடையும். இந்த வாகனமானது உடனடி மருத்துவ சிகிச்சை அளித்து பயனாளிகளை மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.
மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, மகப்பேறு, பாதுகாப்பான பிரசவ போக்குவரத்து மற்றும் தாய்சேய்நல மருத்துவ பரிசோதனைகளுக்கான சேவை.
மருத்துவ மற்றும் எதிர்பாராத அவசரநிலைகளில் உதவுவதற்கு ஏற்றவாறு இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில் உள்ள பயனாளிகளை உரிய 108 அவசர கால வாகனங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இணைப்பு வாகனமாக இவ்வாகனங்கள் செயல்படும்.
எளிதில் அணுக முடியாத, 10 மாவட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களை தேர்ந்தெடுத்து, அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கும் மற்றும் இதர மக்களுக்கும் இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள் உடனடி சேவை செய்யும். இந்த இருசக்கர அவசரகால வாகனத்தில் ஜி.பி.எஸ் (GPS) கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.