தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் இருவரின் திரைப்படங்களும் ஜனவரி 11-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பிரம்மாண்ட கட்அவுட்கள் வைக்க தடை செய்தும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய், அஜித் ஆகிய இருவருக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இருவரின் திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும்போது, ரசிகர்கள் கட்அவுட்களை வைத்து போட்டி போட்டுகொண்டு கொண்டாடுவார்கள். மேலும், தங்கள் ஹீரோ நடிகரின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிற நிகழ்வுகளும் நடைபெறும்.
தமிழ் சினிமா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களின் திரைப்படம் வெளியாகும்போது, கட் அவுட்களை அமைத்து, சாமி சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்வது போல, நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படமும், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வாரிசு படத்தைக் கொண்டாட விஜய் ரசிகர்களும் துணிவு படத்தைக் கொண்டாட அஜித் ரசிகர்களும் கட்அவுட், பட்டாசு தயாராக உள்ளனர். மேலும், ஜனவரி 11-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளாக வெளியாக உள்ளது.
இதனிடையே, வாரிசு படம் ரிலீஸ் கொண்டாட்டங்களுக்காக திரையரங்குகளில் வைக்கப்படும் உயிரற்ற கட்அவுடுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதை தடுத்து நிறுத்தும் வகையில் ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சார்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், வரும் 13,14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வாரிசு, துணிவு படங்களுக்கு அதிகாலை 4 மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரையரங்கில் பிரம்மாண்ட பேனர் மற்றும் பால் அபிஷேகம் செய்யவும் அனுமதி இல்லையென கூறப்பட்டுள்ளது. திரைப்பட டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் அதிக விலையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் டிக்கெட்டிற்கு பின்பக்கத்தில் உயர் அதிகாரிகள் பெயர், பதவி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் அச்சிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“