/indian-express-tamil/media/media_files/2025/09/22/tn-govt-periyar-memorial-in-kerala-alappuzha-foundation-stone-to-be-laid-on-september-26-tamil-news-2025-09-22-16-35-54.jpg)
வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டம் மார்ச் 1924 முதல் நவம்பர் 1925 வரை நடைபெற்ற சூழலில், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரை மே 21, 1924 அன்று போலீசார் கைது செய்தனர்.
சமூக நீதிக்காக போரடியதில் முன்னோடியாக திகழ்ந்தவர் தந்தை பெரியார் (ஈ.வி. ராமசாமி). கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றியைப் பெற்றுத் தந்த அவருக்கு, 1994-ல் வைக்கத்தில் நினைவகம் அமைக்கப்பட்டது. இதனை ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் புனரமைத்த தமிழ்நாடு அரசு புதிய நூலகம் ஒன்றையும் அமைத்தது. தந்தை பெரியாரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நிலையில், வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டம் மார்ச் 1924 முதல் நவம்பர் 1925 வரை நடைபெற்ற சூழலில், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரை மே 21, 1924 அன்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, ஆலப்புழாவில் உள்ள அரூக்குட்டி சிறையில் பெரியார் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்தார். இந்நிலையில், பெரியாரின் நினைவை போற்றும் வகையில், அவர் சிறைவாசம் அனுபவித்த அரூக்குட்டியில் நினைவிடம் அமைக்கப்படும் என்று கடந்த 2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
தொடர்ந்து, அரூக்குட்டி பகுதியில் பெரியாருக்கு நினைவிடம் அமைக்க கடந்த ஆண்டு, கேரள அரசு நடைமுறைகளை முடித்து, வருவாய் ஈட்டும் 54 சென்ட் புறம்போக்கு நிலத்தின் உரிமையை தமிழக அரசுக்கு மாற்றியது. நில வரி வசூலிக்காமல் நிலம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், அரூக்குட்டியில் அமையவுள்ள பெரியாரின் நினைவிடத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான அடிக்கல்லை கேரள கலாச்சார அமைச்சர் சாஜி செரியன் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஈ.வி. வேலு ஆகியோர் இணைந்து செப்டம்பர் 26, 2025 அன்று நாட்ட உள்ளார்கள்.
பெரியாருக்கு நினைவிடம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ. 4 கோடியை ஒதுக்கியுள்ளது. கட்டுமான பணிகளுக்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும், நினைவிடத்திற்கான பணிகள் இன்னும் ஆறு மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் தமிழக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், இந்த நினைவிடம் சிறைச்சாலை மாதிரியில் கட்டப்படும் என்றும், வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், சிறை முகப்பு வடிவமைப்பில் இணைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.