சபாஷ்… ரேஷன் கடைகளில் இனி கருப்பட்டி… ஆனால் இப்படிச் செய்யலாமே?!

கலப்படம் இல்லாத ஒரிஜினல் பனை வெல்லம் கிலோ 350 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது

தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்த் துறைக்கு தனி பட்ஜேட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பேசிய தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெறவேண்டும்.

அதே போல பனை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், கருப்பட்டி ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில், 100 கிராம், 250 கிராம், 500 கிராம், 1 கிலோ என நான்கு வகையில் கருப்பட்டி விற்கப்படவுள்ளது. இதனை வாங்கும்படி மக்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலப்படம் இல்லாத ஒரிஜினல் கருப்பட்டி கிலோ 350 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை விற்கும் பணியை காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் மேற்கொள்ளவுள்ளது. பனை வெல்ல பைகளில் விற்பனை விலை, பொதியப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை அச்சிடும் ஏற்பாடுகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலா் மேற்கொள்ளவுள்ளார்.

விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்த நிலையிலேயே, ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது. இதற்கு மத்தியில், கருப்பட்டியை நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்யும் முடிவு சிறப்பானதே என தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், அதிக விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது சரியான முடிவு அல்ல எனக் கூறியுள்ளனர்.

மற்ற கடைகளில் விற்கும் அளவுக்கு நியாய விலை கடைகளில் கருப்பட்டியின் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது அதனை வாங்க மக்களை தூண்டாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ரேஷன் கடைகளில் மற்ற பொருள்களை விற்பது போல் கருப்பட்டியை மானிய விலையில் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn govt permission to sale palm jaggery in ration shops

Next Story
உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com