தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிவாரணமாக தலா, ரூ.2,000 வழங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் எல்லாம் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மேலும் இரு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. மேலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிவாரணமாக தலா ரூ.2,000 வழங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.5,000 நிவாரணத் தொகை செலுத்தப்பட்டது. தற்போது ஏற்பட்டு உள்ள மழை பாதிப்புகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து, கள நிலவரங்களை தெரிந்து உள்ளார்.
முதலமைச்சரிடம், நிவாரண உதவிகளை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பல்வேறு கட்சியினரும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர். எனவே, ரேஷன் கார்டு அடிப்படையில், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ரூ.2,000 ரொக்கமாக வழங்கலாமா அல்லது ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
சென்னை முழுவதும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். ஒவ்வொரு பகுதி வாரியாக, பாதிக்கப்பட்டவர் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மழை பெய்வதால், இன்னும் அந்த பணி முடிவடையவில்லை. ஒட்டுமொத்த விபரங்கள் சேகரித்த பின், நிவாரண தொகை குறித்து இறுதி செய்யப்படும். என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா ரூ. 5,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க.,வின் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.