தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை அறிவித்துள்ள நிலையில், இந்த பொங்கல் பரிசு ரூ.1,000 அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. உங்கள் அட்டை அரசி அட்டைதானா என்பதை கவனியுங்கள்.
தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பணம் இல்லாமல், பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. பரிசுத் தொகை எதுவும் இல்லாமல், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான அரசு பொங்கல்
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2023-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023-ம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும். தமிழக முதல்வர் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2-ம் தேதி சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
ரேஷன் அட்டைதாரர்கள் வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், எல்லா வகை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்காது. அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த பொங்கல் பரிசு கிடைக்கும்.
பொங்கல் பரிசு சர்க்கரை அட்டை வைத்து உள்ளவர்களுக்கு இது கிடைக்காது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான ரேஷன் அட்டைகள் உள்ளன. PHH, PHH-AAY, NPHH, NPHH-S,NPHH-NC என மொத்தம் 5 வகையான ரேஷன் அட்டைகள் உள்ளன.
இதில் PHH என்று உள்ள (Priority Household)ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும். PHH-AAY என்று உள்ள Priority house hold- Antyodaya Anna Yojana ரேஷன் அட்டை தாரர்களுக்கு 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். NPHH என்று உள்ள Non Priority Household என்ற அட்டைதாரர்கள் உள்பட இந்த 3 வகையான ரேசன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு கிடைக்கும்.
அதே நேரத்தில், NPHH-S. இது அட்டை வைத்திருப்பவர்களுக்குச் சர்க்கரை மட்டுமே கிடைக்கும். NPHH-NC என்றால் No Commodity ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு எந்த பொருளும் ரேஷன் கடைகளில் கிடைக்காது. இந்த இரண்டு வகையான ரேசன் அட்டைகளை வைத்திருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசு எதுவும் கிடைக்காது.
அதனால், உங்கள் ரேஷன் அட்டையில், PHH, PHH-AAY, NPHH என்று குறிப்பிடப்பட்டுள்ளதா பாருங்கள். இப்படி குறிப்பிடப்பட்டிருந்தால், நீங்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“