நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக கொல்லிமலை இருந்து வருகிறது. இந்த கொல்லிமலை நாமக்கல் நகரின் பகுதியில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது கொல்லிமலை. ஏராளமான மூலிகை தாவரங்கள் இந்த மலையில் இருப்பதால் தமிழகத்தின் மூலிகை தோட்டம் என்றும் கொல்லிமலை அழைக்கப்பட்டு வருகிறது.
கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில் இரவு வானத்தின் உள்ளார்ந்த வனப்பை இயற்கை கலாச்சார மற்றும் வரலாற்று வளமாக அங்கீகரிக்கும் வகையில் ரூ.1 கோடி செலவில் 'இரவு வான் பூங்கா' அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
அதனை செயல்படுத்தும் வகையில், இரவு வான் பூங்கா அமைப்பதற்கு ரூ.44 லட்சம் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொல்லி மலைகள் தனித்துவமான புவியியல் மற்றும் காலநிலை அம்சங்களைக் கொண்டுள்ளன. இதனால் இங்கு இரவு வன பூங்கா நிறுவுவதன் மூலம் ஒளி மாசுபாடு குறைவதோடு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பாதுகாப்பையும் ஒட்டுமொத்த பல்லுயிரியலையும் உறுதி செய்யும் என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இரவு வான் பூங்கா உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள், வானியல் புகைப்படக் கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.