தமிழக விமான நிலையங்களில், பயணியர் விமானங்களின் வருகை, புறப்பாடு எண்ணிக்கை உச்சவரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வேண்டுகோளின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா முடக்கத்துக்குப்பின், உள்நாட்டு விமானப் போக்குவரத்து, கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டது. அப்போது உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணக் கட்டுப்பாடுகளும், கடந்த மே 21ம் தேதி அமல்படுத்தப்பட்டது
உள்நாட்டு விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டபோது, சென்னை விமான நிலையத்துக்கு வரும் உள்ளூர் விமானங்களின் எண்ணிக்கையை 50 ஆக நிர்ணயித்தது. இந்த உச்ச வரம்பு கடந்த செப்டம்பர் மாதம் சென்னை விமான இயக்குனரின் கோரிக்கையை ஏற்று 145 ஆக உயர்த்தப்பட்டது
இதனையடுத்து, சென்னை விமான நிலையத்திற்கு வரும் மாநிலங்களுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டது.
தற்போது, தமிழக விமான நிலையங்களில், பயணியர் விமானங்களின் வருகை, புறப்பாடு எண்ணிக்கை உச்சவரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
2,349 விமானங்களில் 2,97,102 பயணிகள் 2021 பிப்ரவரி 12 அன்று பயணம் மேற்கொண்டதாக முன்னதாக விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார். உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதில் இருந்து இது வரையிலான தினசரி பயணிகளின் எண்ணிக்கையில் இது தான் அதிகம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே, தென்னாப்ரிக்கா, பிரேஸில் நாடுகளில் உருமாறிய கோவிட்-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுபாடுகள் வரும் 22ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil