தமிழகத்தில் மாநிலக் கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. குறிப்பாக திமுக அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, மழலையர் பள்ளிகள் தொடங்கி +2 வகுப்பு மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளில் பல்வேறு மாற்றங்களை அதிரடியாக செய்து சரவெடிகளாய் வெடித்துக் கொண்டிருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அந்தவகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தியும், பயிற்சிகளில் உற்சாகப்படுத்தியும் அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தந்து வருகிறது.
அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களைத் துபாய்க்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. வினாடி வினா போட்டிகளில் வென்ற 67 மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று கல்விச் சுற்றுலாவுக்குச் சென்றனர். அதே விமானத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன் சென்றார்.
துபாயின் ஜெபல் அலி பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இந்து கோயிலை மாணவ மாணவிகள் சுற்றிப் பார்த்தனர். இந்தக் கோயிலைக் கடந்த மாதம் தான் துபாயின் ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் திறந்து வைத்தார். 80 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு உள்ள இந்த இந்து கோயில் அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரே கோயிலில் சிவன், கிருஷ்ணர், முருகன் என மொத்த 16 சாமி சிலைகள் உள்ளது.
இன்று மாணவர்கள் அபுதாபியில் உள்ள மிகவும் புகழ்பெற்ற லூவர் மியூசியத்திற்கு சென்றுள்ளனர். சர்வதேச அளவில் உள்ள மிகச் சிறந்த அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும். இதில் உள்ள கலைப் பொருட்களைப் பார்த்து அரசுப் பள்ளி மாணவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள முடியும். அபுதாபி செல்லும் அனைவரும் சென்று பார்க்கும் இடங்களில் ஒன்றாக உள்ள இந்த லூவர் மியூசியம் கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும்.
இந்த லூவர் மியூசியம் அபுதாபி மற்றும் பிரான்ஸ் அரசுக்கும் இடையே போடப்பட்ட 30 ஆண்டுக்கால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். அரேபிய தீபகற்பத்தில் மிகப் பெரிய அருங்காட்சியகமாக உள்ள இது, கடந்த 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட பல்வேறு கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
பிரான்ஸ் உள்ளிட்ட பல நாட்டு கலாசாராங்களை பிரதிபலிக்கும் பொருட்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், மாணவர்களுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கச் சுற்றுலா வழிகாட்டியைத் தனியாக நியமித்து உள்ளனர். அவர்கள் அந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒவ்வொரு கலைப் பொருட்களையும் மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கினர். இதனை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
லூவர் மியூசியம் இந்த லூவர் மியூசியம் அபுதாபி மற்றும் பிரான்ஸ் அரசுக்கும் இடையே போடப்பட்ட 30 ஆண்டுக்கால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். அரேபிய தீபகற்பத்தில் மிகப் பெரிய அருங்காட்சியகமாக உள்ள இது, கடந்த 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட பல்வேறு கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இதனை பார்த்த மாணவர்கள் வியந்து தமிழக அரசை பாராட்டினார்.
பொதுவாக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, எதாவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அதற்கு உரிய மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெறுவதே சிரமமாக இருக்கும். இப்போது துபாய் சென்றுள்ள அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அதைக் கவனிக்க மருத்துவக் குழு ஒன்றை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்பாடு செய்யச் சொன்னார். அதன்படி அமீரக திமுக பொறுப்பாளர் எஸ். எஸ் மீரான் இரு மருத்துவர்களை ஏற்பாடு செய்துள்ளார். இந்த மருத்துவ குழுவினர் மாணவர்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் அவர்கள் உடனேயே பயணிக்கின்றனர்.
பெரும்பாலும் தமிழக மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்வது வழக்கம். இந்த வழக்கத்தை கடந்து போனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மும்பை என செல்வது வழக்கம். இந்த வழக்கத்தைக் கடந்து தமிழக கல்வி அமைச்சர் துபாயில் நடைபெறும் புத்தக திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவும், அயலக சுற்றுலாவில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களை பங்கெடுக்கச்செய்யும் வகையில் முறையான அரசு அனுமதியுடன் தமிழக மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு தன்னோடு அழைத்துச்சென்றிருக்கின்றார்.
இந்த கல்விச்சுற்றுலா தங்களுக்குப் பெரிதும் உதவுகிறது என்றும், வெளிநாட்டு கலாசாரம் குறித்துத் தெரிந்து கொள்ள இது உதவிடும் என்றும், அதேநேரம், வெளிநாட்டுக்கு முதல்முறையாக வந்துள்ள பள்ளி மாணவர்களின் உடல்நல பாதிப்புகளைக் கவனிக்கப் பெண் மருத்துவர் உள்ளதும் சவுகரியமாக உள்ளதாகத் தெரிவித்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.