scorecardresearch

அயோத்யா மண்டபத்தை கைப்பற்ற தமிழக அரசு முடிவு; வழக்கின் பின்னணி என்ன?

அயோத்யா மண்டபத்தை கைப்பற்ற தமிழக அரசு முடிவு; காரணம் என்ன? இந்த வழக்கின் பின்னணி என்ன?

TN Govt seizes control over Ayodhya mandapam and its case history: சென்னை அயோத்யா மண்டபம் தொடர்பான வழக்கின் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்ததோடு, இந்து சமய அறநிலையத்துறை அதனை கையகப்படுத்த ஏப்ரல் 12 அன்று அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள அயோத்தி மண்டபம் 1964 ஆம் ஆண்டு ஸ்ரீ ராம் சமாஜம் அமைப்பால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டது. ஸ்ரீ ராம் சமாஜ் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து, 2013 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக அரசால் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர உத்தரவிடப்பட்டது. கோவிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.

அயோத்தி மண்டபம் ஒரு பக்தி மையமாகும், இது ‘ஹோமம்’ (பூஜைகள்) மற்றும் ‘ராதா கல்யாணம்’ போன்ற சமய சொற்பொழிவுகளை வழக்கமாக நடத்துகிறது.

2014ல் ஸ்ரீ ராம் சமாஜ் தாக்கல் செய்த மனுவை கடந்த வாரம், நீதிபதி வி.எம்.வேலுமணி தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒவ்வொரு ஆண்டும், சங்கத்தின் உறுப்பினர்களால் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஸ்ரீ ராம் சமாஜ் நிர்வாகம் என்பது தேர்தல் மூலம் தேர்வாகும் 15 நபர்கள் மூலம் நடத்தப்படுகிறது. அயோத்யா மண்டபம் ஒரு குடும்பத்தால் நடத்தப்படவில்லை. அயோத்யா மண்டபத்தில் உள்ள மதச்சார்பற்ற பள்ளி மற்றும் திருமண மண்டபத்தின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? திருமண மண்டபமும் புக்கிங் செய்த நிலையில் உள்ளதால் அங்கு வருபவர்களை தடுக்கக்கூடாது. என ஸ்ரீ ராம் சமாஜ் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி அறநிலையத்துறை இணை ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கடந்த மாதம் தனி நீதிபதி உறுதி செய்துள்ளதாகவும், தற்போது அயோத்யா நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முந்தைய உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, எதிர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு அவகாசம் அளித்தனர். தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: ’மாநில அரசின் கோரிக்கையை நிராகரிக்கிறார்’; ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் சிபிஎம், விசிக

இதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையால் மண்டபம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து, கிட்டத்தட்ட 60 பேர் அயோத்தி மண்டபம் முன் போராட்டம் நடத்தினர். அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீது ஐபிசியின் நான்கு பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்தை வெளிப்படையாக கண்டித்துள்ளார், அதே நேரத்தில் மண்டபத்தை கைப்பற்றும் திமுக அரசின் நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜகவினர் குற்றம் சாட்டினர்.

அயோத்தி மண்டபம் கோவில் அல்ல என்பதால், இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவது சட்டவிரோதமானது என்று ஸ்ரீ ராம் சமாஜ் தலைவர் எஸ் ரவிச்சந்திரன் குற்றம் சாட்டினார். மேலும் மண்டபத்தில் வழிபாட்டிற்காக சிலைகள் எதுவும் நிறுவப்படவில்லை, ஆனால் ராமர், சீதை மற்றும் அனுமன் ஆகியோரின் உருவப்படங்கள் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன என்றார். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அயோத்தி மண்டபம் ஒரு பொதுக் கோயில் என்றும், உண்டியல் மூலம் காணிக்கைகள் இருப்பதாகவும் கூறியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம், மாநிலத்தில் உள்ள 40,000 க்கும் மேற்பட்ட கோவில்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட மடங்களின் நிர்வாகத்தின் பொறுப்பில் இருக்க தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. மாநிலத்தில் உள்ள தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் அந்தந்த சமூகத்தை பின்பற்றுபவர்களால் நடத்தப்படுகின்றன, இந்து கோவில்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதற்கிடையில், அயோத்தி மண்டபத்தில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த பிறகே கோயிலை கையகப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn govt seizes control over ayodhya mandapam and its case history