சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்கள் அதிகரித்து வருவதால், உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு அவசியமாகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது. இருப்பினும், இந்த உண்மை சரிபார்ப்பு என்பதில் செய்தி ஊடகங்களும் உள்ளடங்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடக தளங்களிலும் வெளியாகும் தமிழக அரசு தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கு உண்மை சரிபார்க்கும் பிரிவு ஒன்றை உருவாக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அக்டோபர் 6-ம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், உண்மைச் சரிபார்ப்புப் பிரிவின் கீழ் மத்திய பணிக்குழு செயல்படும் என்றும், இந்த திட்டம் இயக்குநரால் வழிநடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்புப் பிரிவின் பணி இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யூடர்ன்.இன் (youturn.in) தளத்தின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஆவார். இந்த தளம் சமூக ஊடக உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்து தெரிவிக்கும் வேலையைச் செய்கிறது.
சமூக ஊடகங்களின் வளர்ச்சியுடன், வெறுப்பு பேச்சு, தவறான தகவல், பொய்யான தகவல் பரப்புவது அதிகரித்து வருவதால், அந்த தகவல்களின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்காக அரசாங்கத்தால் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பிரிவை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உண்மைத் தன்மை சரிபார்க்கும் பிரிவு அனைத்து ஊடக தளங்களிலும் வெளியாகும் செய்திகள், தகவல்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும் என்று இந்த அரசாணை கூறுகிறது. அதனால், அனேகமாக செய்திகள் உள்பட, “உண்மை தன்மை சரிபார்ப்புப் பிரிவின் நோக்கம், போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் / தவறான உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்களைத் தடுக்கும் வகையில் செயல்படும். இந்த பிரிவால், அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு தொடர்பான தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள், கொள்கைகள், திட்டங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பான தகவல்களின் உண்மைத் தன்மை சரிபார்க்கப்படும்.
மத்திய அரசின் மிகவும் விமர்சிக்கப்பட்ட உண்மைச் சரிபார்ப்புப் பிரிவைப் போலவே, தமிழக அரசின் இந்த பிரிவும் அரசு தொடர்பான செய்திகள் அல்லது தகவல்களில் கவனம் செலுத்தும். மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏப்ரல் 7, 2021-ல் தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளில் திருத்தங்களை அறிவித்தது, அதில் சமூக ஊடக தளங்களில் அல்லது செய்தி ஊடக நிறுவனங்களில் பகிரப்படும் தகவல்கள் பொய்யானதா இல்லையா என்பதை முடிவு செய்ய ஒரு உண்மைச் சரிபார்ப்பு நிறுவனத்தை அனுமதித்தது.
திருத்தப்பட்ட இந்த சட்ட விதிகளின்படி, தவறான தகவல்கள், போலியான தகவல்கள் அல்லது தவறாக வழிநடத்தும் தகவல் அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகளை அகற்ற சமூக ஊடக தளங்களைக் கேட்கும் அதிகாரத்தையும் இந்தத் திருத்தம் வழங்கியுள்ளது. ஆனால், தமிழக அரசு உருவாக்கியுள்ள உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு பதிவுகளை நீக்கக் கேட்கும் என்று தமிழக அரசின் அரசாணையில் கூறவில்லை. இருப்பினும், இது விவகாரங்களை சட்டம் மற்றும் காவல் துறைக்கு அனுப்பும். இந்த உண்மைச் சரிபார்ப்புப் பிரிவின் முதன்மைக் கவனம் வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்துவதாக இருக்கும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு உருவாக்கியுள்ள இந்த உண்மை சரிபார்ப்பு பிரிவு, சமூக ஊடகங்கள் மட்டுமில்லாமல், அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றின் தகவல் தொடர்பான புகார்களை மத்திய பணிக்குழு எடுத்துக்கொள்ளும். மாநில அரசு தொடர்பான எந்தத் தகவலையும் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கு அவர்கள் தானாக முன்வந்து ஊடக விஷயங்களை எடுக்கலாம். அவை உண்மை சரிபார்ப்புப் பிரிவின் வரம்பிற்குள் வருமா என்பதைப் பார்க்க, இந்த தகவல்களைப் பிரித்து அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க பல்வேறு உண்மைச் சரிபார்ப்புக் கருவிகளைப் பயன்படுத்தும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மைச் சரிபார்ப்பு பிரிவு எடுக்கும் தகவல்களை நடவடிக்கை எடுக்க வேண்டிய தகவல்கள், நடவடிக்கை தேவையில்லாத தகவல்கள் பிரிக்கும். நடவடிக்கை எடுக்க வேண்டிய தகவல்கள் வரிசையில் வகைப்படுத்தப்படும் தவறான தகவல்கள் மற்றும் போலியான தகவல்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அரசாங்கத்தின் சட்ட மற்றும் காவல் துறையிடம் ஒப்படைக்கப்படும்.
அதே நேரத்தில் தமிழக அரசு உருவாக்கியுள்ள இந்த உண்மை சரிபார்ப்பு பிரிவு, மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். ஒரு திட்ட இயக்குநர் இந்த பிரிவின் மத்திய பணிக் குழுவிற்கு தலைமை தாங்குவார். திட்ட இயக்குனர் பயிற்சி இயக்குநருக்கு பயிற்சி மற்றும் உள்ளடக்கத்தை எழுதுவதில் உதவுவார். தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இணை இயக்குநர், பொதுப் பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வை ஒருங்கிணைத்து, பெறப்பட்ட உள்ளடக்கத்தை ஆய்வு செய்வதற்கும், அவற்றை உண்மைச் சரிபார்ப்பதற்கும் போலிச் செய்திகள், தவறான தகவல்கள், போலியான தகவல் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பார். ஒரு மாவட்டத்தில் உள்ள மொத்த தாலுகாக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு மாவட்டமும் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாவட்ட பகுப்பாய்வுக் குழுவைக் கொண்டிருக்கும் என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு செயல்படும் விதம் குறித்து தி நியூஸ் மினிட் குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவைப் போலவே, இந்த ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி செய்திகளைத் தடுக்க உண்மை சரிபார்ப்பு பிரிவை உருவாக்கியது. கர்நாடகாவின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, தவறான தகவல் அல்லது தவறான தகவல்களை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.
கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே-வின் இந்த அறிவிப்பு விமர்சனத்தை சந்தித்தது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. “போலி செய்தி உள்ளடக்கத்தை சரிபார்க்க எந்த முயற்சியும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத சுயாதீன அமைப்புகளால் செய்யப்பட வேண்டும், அவை எதிர்ப்புக் குரல்களைக் கட்டுப்படுத்தும் கருவிகளாக மாறக்கூடாது.” என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியது. இதே போல, தமிழக அரசும் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு உருவாக்கியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.