தமிழ்நாட்டில் கடந்த 13 ஆண்டுகளில் மாநில அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் உட்பட நான்கு விசாரணை ஆணையங்களுக்காக மொத்தம் ரூ. 11.17 கோடி செலவிடப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணை ஆணையத்துக்கு பெரிய தொகை செலவு செய்யப்பட்டாலும், ஆணையத்தின் அறிக்கையில் செய்யப்பட்ட பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏன் என்று ஆர்.டி.ஐ செயல்பாட்டாளர் எஸ். கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ செயல்பாட்டாளர் எஸ். கார்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் கடந்த 13 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்களுக்கு தமிழக அரசால் எவ்வளவு செய்யப்பட்டுள்ளது என கேட்டு பதில் தகவலைப் பெற்றுள்ளார்.
அதன்படி, தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க தமிழக அரசு அமைத்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்துக்கு ரூ.5.60 கோடி செலவிடப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
2011-ம் ஆண்டு நடந்த பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி கே.சம்பத் ஆணையத்துக்கு 82 லட்சத்து 64 ஆயிரத்து 678 ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு விசாரணை ஆணையம் 2013-ல் அமைக்கப்பட்டது. நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு ஆணையத்துக்கு 2 கோடியே 17 லட்சத்து 29 ஆயிரத்து 388 ரூபாய் செலவு செய்யப்பட்டது.
மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையின் பின்னணியில் உள்ள காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிக்க 2017-ல் அமைக்கப்பட்ட நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் விசாரணை ஆணையத்துக்கு 2 கோடியே 57 லட்சத்து 49 ஆயிரத்து 741 ரூபாய் செலவிடப்பட்டது.
இந்த தகவல்களைப் பெற்ற ஆர்.டி.ஐ செயல்பாட்டாளர் எஸ். கார்த்திக், இந்த விசாரணை ஆணையங்களுக்கு மாநில அரசு பெரிய தொகையை செலவழித்திருந்தாலும், இந்த ஆணையங்களின் அறிக்கைகளில் செய்யப்பட்ட பரிந்துரைகளை செயல்படுவதில் இருந்து அரசாங்கம் பின்வாங்குகிறது. நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் மே 15, 2022, மற்றும் அதே ஆண்டு அக்டோபர் 18 அன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கைப்படி, “அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேசன்; முன்னாள் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி எஸ். கபில்குமார் சரத்கர்; தூத்துக்குடி முன்னாள் எஸ்.பி. மகேந்திரன் உள்ளிட்ட 21 அதிகாரிகள் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடுக்கு பொறுப்பாவார்கள்” என்று கூறியுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது என்பதால், அவர்களுக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்தது. “நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அரசாங்கம் அமைத்துள்ள ஆணையங்கள் மக்களையும் எதிர்க்கட்சிகளையும் ஏமாற்றும் வெறும் கண்துடைப்புதான் என்பதை இது காட்டுகிறது.” என்று ஆர்.டி.ஐ செயல்பட்டாளர் கார்த்திக் கூறினார்.
மேலும், விசாரணை ஆணையங்கள் அளித்த பரிந்துரைகளின் அறிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், இந்த ஆணையங்களுக்கு செலவிடப்படும் பணத்தால் எந்தப் பயனும் இல்லை என்று கார்த்திக் கூறுகிறார். “நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு 5 கோடியே 60 லட்சத்து 3 ஆயிரத்து 700 ரூபாய் செலவிடப்பட்டது. இது முழுக்க முழுக்க உறுப்பினர்களின் பயணச் செலவு, உணவு மற்றும் தங்குமிடச் செலவுக்காக செலவிடப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவழித்தும் ஒரு ஆணையத்தின் அறிக்கை பரிசீலிக்கப்படா விட்டால், அது துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய அநீதியாகும். குறைந்த பட்சம், 13 பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமான அதிகாரிகள் பொறுப்பேற்கப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியையாவது நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் கார்த்திக் வலியுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.