தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி முன்கூட்டியே 3 மாத காலம் முன்னதாக அளிப்பது, அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் உள்பட அரசு ஊழியர்கள் தொடர்பான 13 முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய (செப்டம்பர் 07) கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 13 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்து பேசியதாவது: “பேரவைத் தலைவர் அவர்களே அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக அவர்களுக்கு உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கக்கூடிய தோழனாக என்றைக்கும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற அரசுகள் அறிவித்த செயல்படுத்திய அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள் எண்ணற்றவை இந்த நாட்டுக்கு வழி காட்டுபவை அந்த வகையில் அண்மையில் பல்வேறு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களை சேர்ந்த சங்கப் பிரதிநிதிகள் அரசிடம் வைத்த கோரிக்கை கோரிக்கைகளை எல்லாம் பரிசோதித்து முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிட விரும்புகிறேன்
- அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து நிதிநிலை அறிக்கையில் 1.4.2022 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வரப்பெற்ற அரசு ஊழியர்கள் மற்று ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, இந்த அரசுக்கு கடும் நெருக்கடியான நிதி சூழல் இருப்பினும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாத காலம் முன்னதாகவே அதாவது 1.1.2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதன் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே அகவிலைப்படி உயர்வை அமல்படுத்துவது மூன்று மாத காலத்திற்கு கூடுதலாக 1,620 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 6,480 கோடி ரூபாய் செலவாகும்.
- சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வு பெறக்கூடிய வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும. இதன்மூலம் தற்போது பணியில் இருக்கக்கூடிய 29 ஆயிரத்து 137 சமையலர்களும் 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன் பெறுவார்கள்.
- அரசுப் பணியாளர்கள் தங்கள் பணி காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதி மூலம் அவளுடைய பணித்திறன் மேலும் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை ஒன்றிய அரசால் அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி அந்த அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும்.
- அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணி தேவைக்கேற்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்.
- 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டங்கள் தொடர்பாக பல்வேறு அரசு ஊழியர்களின் சங்கங்கள் தங்கள் வேலை நிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணி நீக்க காலம் ஆகியவற்றை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை பரிவுடன் பரிசீலித்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் ஆகியவை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
- வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில் கலந்தாய்வின்போது அவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும். மேலும், போராட்ட காலத்தில் அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். அந்த ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அதுவும் சரி செய்யப்படும்.
- பணியில் இருக்கும்போது காலமான அரசுப்பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கும் வகையில் கருணை அடிப்படையிலான நியமனங்கள் குறித்து தற்போது நடைமுறையில் உள்ள தெளிவின்மையை சரி செய்யும் வகையில் உரிய வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.
- அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோர்களின் வயதுவரம்பை கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்படும். மேலும், அரசு ஊழியர்கள் இத்திட்டத்தில் இடர்பாடுகள் ஏதுமின்றி பயன்பெற ஏதுவாக அவர்களுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைந்த தொலைபேசி மையம் (ஹெல்ப் டெஸ்க்) ஒன்று அமைக்கப்படும்.
- மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் சங்கங்களால் கொரோனா நோய்க்கான சிகிச்சைகள் உயர் சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைகளை பொருத்தவரையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொடர்பான 10 லட்சம் ரூபாயைவிட கூடுதலாக கொரோனா சிகிச்சைக்கான செலவு தொகை அரசு நிதி உதவியின் கீழ் அனுமதிக்கப்படும்.
- கணக்கு மற்றும் கருவூலத் துறையின் பணிகளை எளிதாக மேற்கொள்ளும் பொருட்டு அவை துரிதமாகவும் எளிதாகவும் செய்யக்கூடிய வகையில் மாவட்டம்தோறும் பயிற்சியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.
- புதியதாக அரசுப் பணிகளில் சேரும் அரசுப் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பவானி சாகர் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்பட்டு தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிக்கான பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும்.
- அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சார தேவைக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும். மக்களாட்சித் தத்துவத்தில் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்தின் அடித்தளமாக விளங்கக்கூடிய அரசு ஊழியர்களின் நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயமாக படிப்படியாக உறுதியாக நிறைவேற்றும் என்று தெரிவித்து அமைகிறேன்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.