தமிழகத்தில் கம்யூனிட்டி கிச்சன்: முழுச் செலவையும் மத்திய அரசு ஏற்க அமைச்சர் சக்கரபாணி வற்புறுத்தல்

சமுதாய உணவு கூடங்கள் அமைக்க தேவைப்படும் நிலத்தை மாநில அரசு, உள்ளாட்சி அமைப்பின் மூலம் வழங்கலாம். ஆனால் கட்டிடம், சமையல் உள்ளிட்ட மூலதன செலவினை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

மத்திய அரசு முன்மொழிந்த சமுதாய உணவு கூடங்கள் அமைக்க தேவையான நிலங்களை மாநில அரசு சார்பில் ஒதுக்கிதருவதாகவும், ஆனால் கட்டிடம், சமையல் உள்ளிட்ட மூலதன செலவினை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மக்களின் பசியாற்றும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை சீராக்கும்‘மாதிரி சமுதாய சமையல் கூடம்’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அனைத்து மாநில உணவகத் துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய தமிழக அமைச்சர் சக்கரபாணி, ” தமிழகத்தில் 40 ஆண்டுகளாக பொது வினியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக 650 சமுதாய உணவகங்களில், ஏழைகளுக்கு மிகக்குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

எங்கள் அனுபவத்தை வைத்து கூற வேண்டுமென்றால், தகுதியுடைய மக்களே உணவக கூடத்திற்கு சாப்பிட வருகின்றனர். எனவே, அதில் எவ்வித அளவுகோலையும் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக இயற்கை பேரிடர் காலத்தில் சமுதாய கூடம் மிகவும் உதவியாக இருக்கும். அச்சமயத்தில் சமுதாய கூடத்தின் எண்ணிக்கையும், உணவு உற்பத்தி செய்வதும் அதிகரிக்கும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும்

சென்னை அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் உணவுகள் வழங்கப்படுகிறது. எனவே, சமூக கூடங்களில் குறைந்தபட்சம் இரண்டு வேளை உணவு வழங்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் 650 சமூக உணவகங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக நடத்தப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் 407, மற்ற 14 மாநகராட்சிகளில் 105, நகராட்சிகளில் 138, கிராம பஞ்சாயத்துகளில் 4 சமூக உணவகங்கள் செயல்படுகின்றன.

இந்த திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு, நாடு முழுவதும் சமுதாய உணவு கூடங்கள் அமைக்கலாம். சமுதாய உணவு கூடங்கள் அமைக்க தேவைப்படும் நிலத்தை மாநில அரசு, உள்ளாட்சி அமைப்பின் மூலம் வழங்கலாம். ஆனால் கட்டிடம், சமையல் உள்ளிட்ட மூலதன செலவினை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

இந்தத் திட்டத்திற்காக மாநில அரசும், உள்ளூர் அமைப்புகளும் 300 கோடி வரை ஆண்டுதோறும் செலவிடுகிறது. மேலும், வரும் நாள்களில் கலைஞர் உணவகம் என்ற பெயரில் மேலும் 500 சமுதாய கூடங்களை திறந்திட திமுக அரசு முன்மொழிந்துள்ளதாக” தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn govt tells centre to bear reccuring expense of community kitchen

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express