சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் அஜித் குமார் (வயது 28) இளைஞர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 27 ஆம் தேதி விருதுநகரை சேர்ந்த பேராசிரியர் நிகிதா என்பவர் தனது தாயாருடன் மடப்புரம் கோவிலுக்கு காரில் வந்திருந்தார். அப்போது காரை பார்க் செய்ய அஜித் குமாரிடம் நிகிதா உதவி கேட்டுள்ளார்.
இதற்கு தனக்கு கார் ஓட்ட தெரியாது என்றும், தனது நண்பர் ஒருவரை அழைத்து காரை அஜித் குமார் பார்க்கிங் செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் நிகிதாவின் தாய் வீல் சேரில் தான் வர முடியும் என்பதால், அவரை காரில் இருந்து இறக்குவதற்கு அஜித் குமார் மற்றும் அவரது நண்பர் உதவியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது தான், காரில் இருந்த 9 பவுன் தங்க நகை மாயமாக போனது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அஜித் குமாரை கைது செய்து அவரிடம் விசாரித்தனர். மேலும் தனிப்படை போலீசாரும் அவரிடன் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் விசாரணையின் போதே அவர் உயிரிழந்துள்ளார். குடும்பத்தினர் போலீசார் தான் அடித்து கொன்றதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது தாக்கல் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அஜித் குமார் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான அடையாளமாக அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர்லால் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரிக்க மதுரை பெஞ்ச் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. மேலும், தமிழக அரசு தரப்பிலும் அஜித் குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசு வேலையும், அவர்களது குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரணம் மற்றும் நிலம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணையை முடித்து நீதிபதியிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். இதில் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாகவும், அடுத்த வாரத்துக்குள் சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஏற்கனவே தமிழக அரசும் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க பரிந்துரை செய்து இருந்தது. இந்த நிலையில் இன்று அஜித் குமார் மரண வழக்கில் சி.பி.ஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
தமிழக காவல்துறையினரிடம் இருந்து அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள், பிரிவு 103இன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்னர். புகார் கூறிய நிகிதா மீது பல்வேறு பண மோசடி குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும் நிலையில் அவரையும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
திருப்புவனம் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பான வழக்குடன், நகை திருட்டு தொடர்பான வழக்கையும் சேர்த்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும், என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இதனால் சி.பி.ஐ இந்த நகை திருட்டு வழக்கிலும் உண்மையை வெளியே கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
33 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் - சிவகங்கை எஸ்.பி நியமனம்
இந்நிலையில், அஜித் குமார் மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல், மானாமதுரை டி.எஸ்.பி-யாக இருந்த சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 33 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 33 டி.எஸ்.பி-கள் (காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள்) மற்றும் உதவி ஆணையர்களை பணியிடம் மாற்றம் செய்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சிவகங்கை எஸ்.பி-யாக ஆர்.சிவபிரசாத் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மானாமதுரை டி.எஸ்.பி-யாக, பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்பியாக விமாலா, வேலூர் ஏஸ்பியா மயில் வாகணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் எஸ்பியாக விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி எஸ்.பி-யாக புக்ய ஸ்னேக பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி-யாக ஜிஎஸ் மாதவன், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக அருளரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை பொதுப்பிரிவு ஐ.ஜி-யான சாமுண்டீஸ்வரி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பட்டாலியனுக்கு தூக்கி அடிக்கப்பட்ட பாண்டியராஜன்
இந்நிலையில், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன், பழனி பட்டாலியன் கமாண்டனட் எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர் நவீன் மர்மமான முறையில் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில் கொளத்தூர் துணை ஆணையராக பாண்டியராஜன் விசாரணை நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து தற்காலிக விடுப்பில் அனுப்பப்பட்ட காவல் அதிகாரி பாண்டியராஜன் பழனியில் உள்ள டிபிஎஸ் பட்டாலியன் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.