Madras High Court | Tn Government: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயஸ், மற்றும் ஜெயக்குமார், முருகன் ஆகிய மூவரையும் தாய்நாடான இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரிக்கு (எஃப்.ஆர்.ஆர்.ஓ) உத்தரவு பிறப்பிக்குமாறு நேற்று திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சாந்தன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாந்தனின் உடலை விரைவாக இலங்கைக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சாந்தனின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சாந்தனின் மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கை தமிழர்களான முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் திருச்சி முகாமில் இருப்பதாகவும், தங்களை இலங்கைக்கு திரும்ப அனுப்பக்கோரி உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரியிடம் (எஃப்.ஆர்.ஆர்.ஓ) விண்ணப்பித்து உள்ளதாகவும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், பிப்ரவரி 1 ஆம் தேதி இலங்கை தூதரக உயர் அதிகாரியால் வழங்கப்பட்ட பயண ஆவணத்தின் அடிப்படையில் சந்தனுக்கு எஃப்.ஆர்.ஆர்.ஓ பிப்ரவரி 22 அன்று நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனுமதிச் சீட்டு வழங்கியது. எனினும், தனது நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்னர், அவரது உடல்நிலை மோசமடைந்து அவர் இறந்துவிட்டார். எனவே, உடலை மட்டுமே அவரது தாய்நாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்.
விடுதலை செய்யப்பட்ட மற்ற 3 பேரை பொறுத்தவரை, அவர்கள் மூவரும் தங்களுக்கான ஆவணங்களை வழங்கக் கோரி இலங்கை தூதரகத்தை நாடினார்களா? என்பது குறித்து தெரியவில்லை." என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, மூன்று பேர் தொடர்பாக இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும், மூவரும் தனியாக மனுத்தாக்கல் செய்தால் பரிசீலிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“