தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் , தமிழகத்தில் ரூ.1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் வாயிலாக (TANFINET) கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், முத்தலகுறிச்சி கிராமப் பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூன் 9)தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு பின்வருமாறு:
தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளையும் கண்ணாடி இழை கம்பி வடம் மூலம் இணைத்து, அதிவேக இணைய இணைப்பு வழங்குவதே பாரத்நெட் திட்டமாகும். இந்தத் திட்டமானது, தமிழக அரசின், கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நான்கு தொகுப்புகள்:
பாரத்நெட் திட்டம் நான்கு தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. தொகுப்பு ஏ-வில், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு பி-யில், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் வருகின்றன. தொகுப்பு சி-யில், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு டி-யில், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களும் வருகின்றன.
இந்தத் திட்டம் மூலம் பொது மக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு சேவைகள், இணையவழி கல்வி, தொலை மருத்துவம், தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகிய சேவைகளை வழங்க முடியும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியன அதிவேக இணையதள சேவையைப் பெறுவதன் மூலம் கிராம அளவில் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும்.
அதோடு புதிய ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார நிலை மேன்மை அடையவும் இத்திட்டம் வழிவகுக்கும். தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளை பெறவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான தகவல் தொழில்நுட்ப திறன் இடைவெளியை குறைக்கவும் இத்திட்டம் உதவிடும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.கே.கமல் கிஷோர், முதன்மை தொழில்நுட்ப அலுவலர் எ.ராபர்ட் ஜெரார்ட் ரவி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.