நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைக்கப்படவிருந்த பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் அருகே நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனையடுத்து ரூ.31,580 கோடியில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் சுத்திரிப்பு திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து அமைத்து வருகின்றன. இந்த சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய துணை தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் வகையில் சிட்கோ என்று சொல்லக்கூடிய சிறு தொழில்கள் மேம்பாட்டு கழகம், தொழிற்பூங்கா அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான பணிகளில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளியை சிறு குறு தொழில்கள் நிறுவனம் கோரியிருந்தது.
இதற்கு பொதுமக்கள், விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் காவிரி விவசாய சங்கம் வரும் 16 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்தது.
இந்நிலையில், பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெறுவதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதை திரும்பப் பெறுவதாகவும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil