மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு வழங்கப்பட்ட அரசு பாதுகாப்பை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்றதாக கூறப்பட்ட கிரானைட் முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த புகார் சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு உத்தரவிட்டது.
அதன்படி சகாயம் குழு தன் விசாரணையை முடித்து, 2015 நவம்பரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததால், அரசுக்கு, ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுசம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறைகேட்டுக்கு துணை போன அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 212 பரிந்துரைகளை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 2 ம் தேதி அரசு பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக தமிழக அரசுக்கு சகாயம் கடிதம் எழுதினார். 3 ஆண்டுகள் உள்ள நிலையில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தது பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியது.
சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு உள்ள அச்சுறுத்தலை முறையாக மதிப்பிடப்பட வில்லை என்று சகாயத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சகாயத்தை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டப் போவதாக திருச்சி மத்திய சிறைக்குள் தண்டனைக் கைதிகள் பேசிக் கொண்டதாகக் கூறப்படும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
கிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சட்ட ஆணையராக நியமிக்கப்பட்ட பிறகும், சகாயத்திற்கு பலதரப்பட்ட மிரட்டல்கள் வெளிவரத் தொடங்கின.
“இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற‘ மாநில பாதுகாப்புக் குழு ’கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு டிஜிபி ஜே கே திரிபாதி தெரிவித்தார். இந்த குழுவில் மாநில உள்துறை செயலாளர், மாநில போலீஸ் டிஜிபி, மாநில புலனாய்வுத் தலைவர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil