தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநர் பணிக்கு தேர்வாகும் மகளிருக்கான உயரத்தை 160 சென்டிமீட்டரில் இருந்து 150 சென்டிமீட்டராக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை செயலர் க. பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில், "அரசுப் பேருந்து நடத்துநருக்கான தகுதிகள் கடந்த 1998-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. ஆனால், விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைத் தவிர்த்து, இதர போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உடல்தகுதியில் குறைந்தபட்ச உயரம் என்பது 150 செ.மீ. என நிர்ணயிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அலுவலகம் கேட்டுககொண்டது.
இதைப் பரிசீலித்த தமிழக அரசு, ஆண் நடத்துநருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீ. என்றும், பெண் நடத்துநருக்கான உயரம் 150 செ.மீ. என்றும், இரு பாலினத்தவருக்கும் குறைந்தபட்ச உடல் எடை 45 கிலோ என பொதுசேவை விதிகளில் வரையறுக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் நீண்ட காலம் முன்னதாகவே வைக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெண் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிப்போர், குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போது 150 செ.மீ. ஆக குறைக்கப்பட்டு இருப்பதும், நடத்துநர் பணிக்கு தேர்வாக குறைந்தபட்ச உடல் எடை 45 கிலோ இருக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருப்பதும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த உத்தரவு மூலம் கருணை அடிப்படையில் ஏராளமான பெண்களுக்கு இந்த பணி கிடைக்க வாய்ப்புள்ளது என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்து இருக்கிறார்கள்.