மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வங்கக் கடலில் கடலோரத்தில் பேனா வடிவத்தில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி அரசியல்வாதி மட்டுமல்லாமல், ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதால், மெரினா கடற்கரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அருகே 134 அடி உயர பேனா சிலை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கடலில் பேனா சிலை அமைக்கும் முடிவை திரும்பப் பெறுமாறு தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், மாநில அரசின் அனைத்துத் துறைகளும் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறும் வகையில் அவசர அவசரமாக முன்மொழியப்பட்ட நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதிச் சான்றிதழ் வழங்கியதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. “இந்த பகுதிகளில் கட்டுப்பாடற்ற கட்டுமான நடவடிக்கைகள் இயற்கை நீர் ஓட்டத்தில் பேரழிவு விளைவை ஏற்படுத்தும், இது இறுதியில் கடுமையான இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். 80 கோடி செலவில் கட்டப்படும் இந்த நினைவுச்சின்னம் கடற்கரையை மேலும் பாதிக்கும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“