/indian-express-tamil/media/media_files/2025/06/01/MfM4rYOq5gUMxPF2aNOK.jpg)
தமிழக அரசு, திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 8 சதவீதத்தில் இருந்து இருந்து 4 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த உத்தரவிற்கு திரைத்துறையினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி, தமிழகத்தில் ஆண்டுதோறும் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. முன்னதாக, 8 சதவீத வரி கேளிக்கை வரி டிக்கெட் விலையை உயர்த்தியதாகவும், குறிப்பாக சிறிய தயாரிப்புகளின் வருவாயை இது பாதித்ததாகவும் திரைப்படத் துறை பிரதிநிதிகள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், வரி குறைப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தென்னிந்திய திரைப்பட ஊழியர்கள் சம்மேளனம் (FEFSI) நன்றி தெரிவித்துள்ளது.
இதுவரை, திரைப்பட டிக்கெட் விலையுடன் 8 சதவீத கேளிக்கை வரி சேர்க்கப்பட்டது. இந்த வரி மிக அதிகம் என்றும், அதைக் குறைக்க வேண்டும் என்றும் திரைப்படத் துறையில் பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ள வரி குறைப்பு நடவடிக்கை தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், டிக்கெட் விலையில் மாற்றம் இருக்காது என்று கருதப்படுகிறது.
"இந்த வரி குறைப்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த பலனையும் அளிக்காது" என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்.
"கடந்த 7-8 ஆண்டுகளாக டிக்கெட் விலைகள் அதிகரிக்கவில்லை. மின்சாரம் முதல் தண்ணீர் வரிகள் வரை செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்தாலும், டிக்கெட் விலைகளை நிலையாக வைத்திருக்கிறோம். இதனை, குறைக்க இடமில்லை" என்று அவர் கூறினார்.
சில திரைப்பட ரசிகர்கள் இந்த மாற்றம் சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தலாம் என்று கருதுகின்றனர். "டிக்கெட் விலையில் சில ரூபாய்கள் குறையலாம். ஆனால் பாப்கார்ன் போன்ற தின்பண்டங்களின் விலை திரையரங்கிற்குள் இன்னும் அதிகமாக உள்ளது. அதை யாரும் ஒழுங்குபடுத்துவதில்லை" என்று சினிமா ரசிகர் கார்த்திக் கூறினார்.
"திரைப்பட டிக்கெட் விலையை குறைப்பது ஒரு நல்ல நடவடிக்கை. ஆனால் மல்டிபிளெக்ஸ்கள் வசூலிக்கும் மற்ற கட்டணங்கள் அதிகமாக உள்ளன. பார்க்கிங் கட்டணங்களும் திரையரங்கு உரிமையாளர்களால் உயர்த்தப்பட்டுள்ளன; சில மல்டிபிளெக்ஸ்கள் பார்க்கிங்கிற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 30 வசூலிக்கின்றன. ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒரு திரைப்படத்தைப் பார்க்க ரூ. 2,000 க்கும் அதிகமாக செலவு செய்ய நேரிடும்" என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என். உதயகுமார் கூறுகிறார்.
"குளிர்பானம் அல்லது காபி போன்றவை வெளியே இருப்பதை விட திரையரங்கிற்குள் இரு மடங்கு விலை அதிகமாக விற்கப்படுகிறது; நுகர்வோரின் நலனுக்காக கொள்கை வகுப்பாளர்கள் இதை கவனிக்க வேண்டும்" என்றும் அவர் மேலும் கூறினார்.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன், வணிக நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளுக்கு 10% கேளிக்கை வரி விதிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற நிறுவனங்களில் நடைபெறும் கச்சேரிகள், நிகழ்ச்சிகள் மற்றும் பிற திரைப்படமல்லாத நிகழ்ச்சிகளின் விலையை பாதிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.