தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே, கொரோனா பரவலின் வேகமும் உச்சத்தை தொட ஆரம்பித்துள்ளது. நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவின் போது, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், ‘தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளை நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு செல்லும் போது, மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். வாக்குச்சாவடிகளில் தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க, தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.
வீடு வீடாக சென்று, பொதுமக்களுக்கு காய்ச்சல் சோதனைகள் செய்யப்படுவது மற்றும் தடுப்பூசி தொடர்பான பரப்புரைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும். அவை, மீண்டும் 7 தேதிக்கு பிறகு மேற்கொள்ளப்படும். மகாராஷ்டிராவில் நிலவும் கொரோனா பாதிப்பை போல், தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க, மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி ஊழியர்கள் அனைவருக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள், வாக்குப் பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம். மேலும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் தமிழகத்தில் முழு ஊரடங்கு என்று பரவிவரும் செய்தியை நம்ப வேண்டும். மீண்டும் முழு ஊரடங்கிற்கான திட்டம் இல்லை. அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil