தமிழ்நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, தினசரி கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது.
நேற்று மட்டும் 17,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 7,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் சூழலில், கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று, செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், " சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது. 2ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 60 வயதுக்கு மேற்பட்டோர் தகுதியானவர்கள். தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் தாமாக முன்வந்து 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 93 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள்" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil