Tamil-nadu | chennai-high-court: சென்னை உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த பொது நலன் மனுவில், 'அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் இல்லாமலும், விதிகளை பின்பற்றாமலும் உண்டியல்களை திறக்க கூடாது. உண்டியல் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டும், உண்டியல்களை திறந்து காணிக்கையை எண்ணும் போது கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
காணிக்கை எண்ணும் பணிக்கு உள்ளூர் மக்களையே பணியமர்த்த வேண்டும். உண்டியல் எண்ணிக்கையை கண்காணிக்க மாவட்டம் தோறும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அல்லது ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்களை அமைக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்து வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை ஆணையர் முரளிதரன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 5000 ரூபாய்க்கு மேல் வசூலாகும் கோவில் உண்டியல்களை மாதந்தோறும் திறக்க வேண்டும், இரு வாரங்களுக்கு முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படுகிறது.
இந்த விதிகளின்படி, கோவில் அறங்காவலர் குழு தலைவர், செயல் அலுவலர், தக்கார்கள், பொது மக்கள், வங்கி அதிகாரிகள் முன் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதிலுள்ள பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுவதாகவும், முக்கிய கோவில்களில் உண்டியல் திறப்பு மற்றும் எண்ணிக்கை கோவில் யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், முக்கிய கோவில்களில் உண்டியல் திறப்பின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவதால், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அவசியமில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பதிவு செய்த தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு வழக்கு விசாரணையை 2024 ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“