Advertisment

போலீஸ் - பஸ் கழகம் மோதல் போக்கு: அவசரமாக கூடிய இரு துறை செயலர்கள்; சுமூக தீர்வு காண ஒப்புதல்

போலீஸ் - நடத்துனர் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி திடீர் ஆலோசனை மேற்கொண்டனர்.

author-image
WebDesk
New Update
TN home secretary amutha transport secretary phanindra reddy consult over police conductor fight Tamil News

தமிழகத்தில் போலீஸ் - நடத்துனர் ஆகிய இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தால் பெரும் சர்ச்சை வெடித்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் போலீஸ் - நடத்துனர் ஆகிய இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தால் பெரும் சர்ச்சை வெடித்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் ஏறிய காவலரிடம் டிக்கெட் எடுக்கும்படி நடத்துனர் கேட்டுள்ளார். ஆனால், டிக்கெட் எடுக்க மறுத்த காவலர், காவலர் பணியில் இருப்பவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று கூறி வாக்குவாதம் செய்தார். 

Advertisment

இதையடுத்து, நடத்துனரும் காவலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அந்த பேருந்தில் பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதள அதிகம் பகிரப்பட்டு வைரலாகியது. இந்த வீடியோவுக்கு விளக்கமளித்த அரசுப் போக்குவரத்துக் கழகம், "அரசு பஸ்களில் காவலர்கள் இலவசமாக பயணிக்க முடியாது. அதற்கான அனுமதி வாரண்ட் இருந்தால் மட்டும்தான் பயணிக்க முடியும்" என்று தெரிவித்தது. 

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தலைநகர் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அரசு பஸ்களுக்கு எதிராக போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. ஒருவழிப் பாதையில் பயணித்தல், சீருடை அணிவதில் குறைபாடு, நிறுத்தத்தைத் தாண்டி நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி அரசுப் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. 

அரசு பஸ்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையில், காவலர்களின் இலவச பயணம் குறித்த போக்குவரத்துக் கழக அறிவிப்புக்குப் பிறகு, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் சர்ச்சை அதிகரித்தது. போலீசாரின் இந்த நடவடிக்கையை பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்தனர். 

இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து ஊழியர்கள் - போலீசார் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.

இதனையடுத்து, டிக்கெட் எடுப்பதில் மோதலில் ஈடுபட்ட அரசு பஸ் நடத்துனரும் காவலரும் சமரசம் செய்துகொண்டனர். காவலரும் நடத்துனரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஆரத்தழுவி கட்டியணைத்து சமரசம் செய்துகொண்டனர். மேலும், போக்குவரத்து மற்றும் போலீஸ் ஆகிய 2 துறைகளும் இனி நண்பர்களாக பணியாற்றுவோம் என்று இருவரும் உறுதியளித்தனர். பின்னர், இருவரும் ஒன்றாக டீ குடித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறி செயல்பட்டதாக அரசு பஸ்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு தொடர்ந்து அபராதம் விதித்து வந்த நிலையில் அந்த நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசு தரப்பில் ஆணை வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment