விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கடந்த 13-ம் தேதி அளவில் பலர் கள்ளச் சாராயம் அருந்தியுள்ளனர். கள்ளச் சாராயம் அருந்திய நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு ஏற்பட்டது. ஒருவர் பின் ஒருவராக விழுப்புரத்தில் 14 பேரும், செங்கல்பட்டில் இதுவரை 8 பேரும் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், சீமான் என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்தார்.
1,000 லிட்டர் மெத்தனால் விற்பனை
கள்ளச் சாராயம் விவகாரத்திற்கு அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். இச்சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலர் சஸ்பெண்ட், பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் அல்ல என்றும், தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் சேர்க்கப்பட்ட விஷச் சாராயம் என்றும் காவல் துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்தார். இந்நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது. சென்னை அருகே மதுரவாயலில் விநாயகா எண்டர்பிரைசஸ் என்ற கெமிக்கல் ஆலை நடத்தி வரும் இளையநம்பியை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் 1,000 லிட்டர் மெத்தனாலை சாராய வியாபாரிகளுக்கு விற்றது அம்பலமாகி உள்ளது.
தடயவியல் ஆய்வு அறிக்கையில் விழுப்புரம், செங்கல்பட்டில் இறந்தவர்கள் குடித்தது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல. ஆலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்கிற விஷச் சாராயம் என்பது தெரியவந்ததுள்ளது. இந்நிலையில் இளைய நம்பி யாருக்கெல்லாம் மெத்தனால் விற்பனை செய்தார், எங்கிருந்து வந்தது, வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதாக என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“